×

பன்னீர் செல்வம் பார்க் சிக்னலில் இருந்த தேர் வடிவிலான போக்குவரத்து கூண்டு அகற்றம்

ஈரோடு, பிப்.28: ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் சிக்னலுக்காக வடிவமைக்கப்பட்ட பழமையான தேர் வடிவிலான போலீஸ் கூண்டு அகற்றப்பட்டது. ஈரோட்டில் பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் பிரப் ரோடு, காந்திஜி ரோடு, திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு ரோடு, கச்சேரி வீதி ஆகிய 5 சாலைகள் சந்திக்கும். இந்த பகுதியில், 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிக்னல்களை சீரமைக்க சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தேர் வடிவிலான போலீஸ் கூண்டு வைக்கப்பட்டது. இந்த தேரில் போலீசார் அமர்ந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வந்தனர். ஆனால், இந்த தேரில் பொருத்தப்பட்ட சக்கரங்களினால், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் யூ டர்ன் செய்யும் போது மோதி விபத்துக்குள்ளாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால், இந்த தேரினை மாற்றி புதிய போலீஸ் கூண்டு அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற போலீஸ் நிர்வாகம் இந்த தேரினை அகற்றி, ஏசி மற்றும் பேன் வசதியுடன் கூடிய போலீ்ஸ் கூண்டு வைக்க முடிவு செய்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு தேர் வடிவிலான போலீஸ் கூண்டு ஜேசிபி உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து டிராபிக் டிஎஸ்பி எட்டியப்பன் கூறுகையில்,`தேர் வடிவில் இருந்த போலீஸ் கூண்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனால் கூண்டை அப்புறப்படுத்தி உள்ளோம். தற்போது அதே பகுதியில் நவீன முறையில் புதிய போலீஸ் கூண்டு வைக்க உள்ளோம். அதில், ஏசி மற்றும் பேன் வசதி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அந்த கூண்டு வைக்கப்பட உள்ளது’ என்றார்.

Tags : Removal ,Paneer Wealth Park ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...