×

10 வருவாய் இனங்களுக்கான ஏலத்தில் ஆளுங்கட்சியின் வியூகம் தோல்வி

ஈரோடு, பிப்.28: ஈரோடு மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்கள், கட்டண கழிப்பறைகள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் இதர பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் ஏலம் விடப்பட்டு அதன்மூலம்,  மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் 2வது பிளாட்பாரத்தில் உள்ள பூக்கடை, மினி பஸ் ஸ்டாண்ட் கீழ் பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடம், பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக பகுதியில் உள்ள இருசக்கார வாகன நிறுத்துமிடம், நேதாஜி ரோடு வணிக வளாக பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம், பஸ் ஸ்டாண்டில் உள்ள சிமெண்ட் கூரை செட்டால் ஆன இருசக்கர வாகன நிறுத்துமிடம், மாநகராட்சி ஆடுவதை கூடம் உள்ளிட்ட 10 இனங்களுக்கான ஏலம் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்காக 300க்கும் மேற்பட்டோர் டெபாசிட் தொகை செலுத்தியிருந்தனர். இந்த முறை ஏலத்திற்கு அதிகளவு போட்டி இருந்ததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் ஏலம் நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

அதன்படி, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவுபடி உதவி ஆணையர் (வருவாய்) குமரேசன், உதவி வருவாய் அலுவலர் வசந்தி ஆகியோர் தலைமையில் ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வந்ததால் ஏலத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில்  ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தின் ஒருபுற கதவு அடைக்கப்பட்டது. ஏலம் நடந்த அறை முன்பு போலீசார் நிறுத்தப்பட்டு டெபாசிட் தொகை  செலுத்தியவர்களை மட்டுமே ஒவ்வொரு ஏலத்திலும் அனுமதித்தனர். இதில், சிண்டிகேட் அமைத்துக் கொண்டு பல்வேறு இனங்களை ஏலம் எடுக்க முன்னாள் மண்டலக்குழு தலைவர் மனோகரன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் சிலரும் காத்திருந்தனர். ஆனால், ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமலிங்கத்தின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஏலத் தொகையை உயர்த்தினர். இதனால், அறைக்கு வெளியே காத்திருந்த அதிமுக முன்னாள் மண்டலக்குழு தலைவர் மனோகரன் தனது ஆதரவாளர்களுடன் ஏலம் நடந்த அறைக்கு சென்று பேசினார். ஆனால், அதிகாரிகள் முறையாக ஏலம் நடத்த வேண்டும் என்று கூறி ஏலத்தை நடத்தினர்.

இதனால் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு வருமானம் பார்க்கலாம் என காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு கட்டத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என மறைமுகமாக ஏலதாரர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். ஆனால், தொடர்ந்து ஏலம் நடத்தப்பட்டு கடந்த முறை விடப்பட்ட ஏலத் தொகையை விட அதிக தொகைக்கு ஏலம் போனது. 3 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்தப்படும். மேலும், ஜிஎஸ்டி 18 சதவீதம் செலுத்த வேண்டும். ஆளும்கட்சியினர் அமைத்த சிண்டிகேட் நேற்றைய ஏலத்தில் எடுபடாமல் போனதால் கட்சியினர் சோகத்துடன் திரும்பி சென்றனர். பல்வேறு கட்சியினர் ஏலம் எடுக்க வந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஏலதாரர்கள் கூறுகையில்,`வழக்கமாக குத்தகை தொழில் செய்பவர்கள்தான் ஏலம் எடுப்பார்கள். ஆனால், நாளடைவில் ஆளும்கட்சியினர் உள்ளே புகுந்து சிண்டிகேட் அமைத்து பணம் பார்க்க தொடங்கினர். நேற்று நடந்த ஏலத்திலும் டெபாசிட் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டால் பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டனர். ஆனால், வெளிப்படையாக ஏலம் நடத்தப்பட்டதால் ஒவ்வொரு இனமும் அதிக தொகைக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை உறுதிப்படுத்தி உரிய ஏலதாரர்களுக்கு வழங்க வேண்டும்’ என்றனர்.

Tags : party ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...