×

விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் ‘கிஷான் சுவிதா’ செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கம்பம், பிப். 28: விவசாயம் குறித்த ஆலோசனை வழங்கும் மத்திய அரசின் ‘கிஷான் சுவிதா’ செயலி குறித்து, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள வலியுறுத்தியுள்ளனர்.
கம்பம் பள்ளதாக்கில் முல்லைப்பெரியாறு மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல், தென்னை, வாழை, காய்கறிகளான பீட்ரூட், முள்ளங்கி, புடலை, பாகற்காய், அவரை, நூக்கல் ஆகிய பயிர்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர். இது தவிர மானாவாரி நிலங்களில் எள், கம்பு, சோளம், மொச்சை ஆகியவை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக, விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் மற்றும் லாபம் கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.நவீன உலகில் சதாராண மளிகை கடை முதல் தொழிற்சாலை வரை மின்னனு இணைய வழி சேவை மூலம் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகினறன. இதேபோல, விவசாயத்திற்கும் பருவநிலை மாறுபாடு, பயிரிடும் முறை, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல ஆலோசனைகள் வழங்க, மத்திய அரசு ‘கிஷான் சுவிதா’ செயலி அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியை விவசாயிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் பாரதப் பிரதமரின் விவசாய நலத்திட்டங்கள் குறித்தும் வெப்பநிலை மாறுபாடு, மண்ணின் ஈரப்பதம், காற்றின் வேகம், மழையளவு ஆகியவற்றை முன்னதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்தியா முழுவதும் உள்ள விளை பொருட்களுக்கான சந்தைவிலை, வேளாண் ஆலோசனை, அரசின் அனுமதி பெற்ற உரம் விற்பனை நிறுவனங்கள், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவசாயம் தொடர்பான தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் காலத்திற்கேற்ற பயிரை சாகுபடி செய்து நல்ல மகசூல் மற்றும் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சிறப்பான சேவை குறித்து, கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. எனவே, கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயிகளுக்கு ‘கிஷான் சுவிதா’ செயலி குறித்து சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kishan Suvita ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது