×

சீல்டு கால்வாயில் நடைபெறும் கட்டுமான பணியை ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, பிப்.28: பெரியாறு பாசன கால்வாயான சீல்டு கால்வாயில் நடைபெறும் கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனத்தின் கீழ் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன பகுதியாக உள்ளன. மாவட்டத்தில் சீல்டு, லெஸ்சிஸ், 48 கால்வாய், கட்டாணிபட்டி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய கால்வாய்கள் வழி பெரியாறு நீர் திறக்கப்படும். இந்த கால்வாய்களில் பல்வேறு இடங்களில் புதர் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்தும் உள்ளன. கால்வாய்களில் வெடிப்பு ஏற்பட்டும் பராமரிப்பற்ற நிலையிலும் உள்ளன.  இதையடுத்து குடிமராமத்து பணியில் கால்வாய்களை பராமரிப்பு செய்ய சீல்டு கால்வாய்க்கு ரூ.1.47 கோடி, 48 கால்வாய்க்கு ரூ.3 கோடி, லெஸ்சிஸ் கால்வாய்க்கு ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. சீல்டு கால்வாய் தவிர மற்ற கால்வாய்களில் விவசாய சங்கம் அமைத்து பணிகள் தொடங்கப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன.  ஆனால் சீல்டு கால்வாயில் மட்டும் சங்கம் அமைப்பதற்கு தாமதம் ஏற்பட்டதால் பணிகள் நடைபெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த நவம்பரில் பணிகள் நடைபெற்ற போது வடகிழக்கு பருவமழை பெய்து கால்வாயில் நீர் இருக்கும் போது பணிகள் நடைபெறுவது வீண், மேலும் தரமற்ற பணிகள் நடப்பதால் நிறுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கடந்த இரண்டு வாரங்களாக பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முறையாக நடப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், சீல்டு கால்வாயில் விவசாய சங்கம் அமைக்க விவசாயிகள் எடுக்கும் முயற்சியை ஆளும் கட்சியினர் தடுத்து பணிகளை காண்ட்ராக்டர்களே செய்கின்றனர். இதனால் கட்டுமானப்பணிகள் முறையாக நடக்காமல் தரக்குறைவாக நடந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதுபோல் பணிகள் நடக்காமல் முறையாக நடக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் இப்பணிகளை ஆய்வு செய்யாமல் உள்ளனர். இதனால் மீண்டும் தரக்குறைவாக பணிகள் நடக்க அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனரா என சந்தேகம் எழுகிறது. நீண்டகாலம் கழித்து நடைபெறும் இப்பணி முறையாக நடப்பதை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : canal ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்