×

மேலூர் அருகே அச்சுறுத்தும் மின்வயர் இடையூறாக மின்கம்பம்

மேலூர், பிப்.28: மேலூர் அருகே சாலையின் குறுக்கே மின் கம்பங்களாலும், தாழ்வாக செல்லும் மின் வயர்களாலும் கிராம மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில் மந்தகுளம் நெடுமலை செல்லும் வழியில் உள்ள சின்னன்ணன் கோயில் அருகே சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக மின் வயர்கள் தொய்வடைந்து கைக்கு எட்டும் தூரத்தில் தொங்குகிறது. இதை சரி செய்ய கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.இதனால் அதிக தென்னை தோப்புகள் உள்ள இப்பகுதியில் மாட்டு வண்டியில் கூட காய்களை ஏற்றி செல்ல முடியாத நிலை உள்ளது. லாரிகள் இப்பகுதியில் வர முடியாமல் போகவே, விவசாயிகள் தங்கள் தேங்காயை விற்க முடியாமல் உள்ளனர். இதேபோல் சேக்கிபட்டி கோயில் திருவிழாவின் போது சுவாமியின் சப்பரத்தை கொண்டு செல்லும் வழியில் உயரம் குறைவான மின்கம்பம் உள்ளதால், ஒவ்வொரு பகுதியாக மின்சாரத்தை நிறுத்தி, அந்த மின்வயர்களை அவிழ்த்து விட்டே சப்பரம் செல்லும் நிலை உள்ளது.

தற்போது திருவிழா துவங்கி உள்ளதால், உடன் சப்பரம் செல்லும் பாதையில் உள்ள மின் வயர்களை உயரத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதனை, மின்வாரியம் ஏனோ கண்டு கொள்ளாமலேயே உள்ளது. மேலும் மேற்கு தெருவில் உள்ள மானாவாரி நிலங்களில் 20 வருடங்களுக்கு முன்பு குடியேறியவர்களின் குடியிருப்பு தற்போது 500ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் இப்பகுதியில் ஊன்றிய மின்கம்பங்கள் தற்போது சாலையின் நடுவிற்கு வந்து விட்டது. இதனால் அப்பகுதியில் டூவீலர்கள் செல்வதற்கே அவதியாக உள்ளது. கார், ஆம்புலன்ஸ் போன்றவைகள் அதற்குள் செல்வதற்கே வழியில்லாததால், உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களை தூக்கி வந்தே வாகனத்தில் ஏற்ற வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது. இதுபற்றி இப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது கோயில் திருவிழா துவங்கி உள்ளதால், உடனடியாக தாழ்வாக செல்லும் மின்வயர்களை சரி செய்ய வேண்டும் என சேக்கிபட்டி பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Melur ,
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்