×

சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி வாலிபர் சைக்கிள் பிரச்சார பயணம்

மதுரை, பிப்.28: சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி, வங்காளதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் வகையில், சுற்றுச்சுழல் மாசை தடுக்கக் கோரி வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமது ஜாகீருல் இஸ்லாம்(27) என்ற வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்தாண்டு செப்.21ம் தேதி டாக்காவில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை துவக்கினார். வங்காளதேசத்தில் பல்வேறு நகரங்கள் வழியாக இந்தியாவின் மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், உ.பி. மத்திய பிரதேசம், ஆந்திரா வழியாக தமிழ்நாடு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், நேற்று மதுரை வந்தார். கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் தனது பயணம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார். பின்பு, அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘புவியியல் பட்டதாரியான நான், பூமியின் இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். மாசு அதிகமானால், பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதற்காக பூமி மாசுபடுவதை தடுக்கவும். அதனை பாதுகாப்பது தொடர்பாகவும் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். மதுரையில் இருந்து, கன்னியாகுமரி வரை சென்று, கேரளா மற்றும் கர்நாடக சென்று, சென்னை செல்கிறேன். பின்பு கப்பல் மூலம், இலங்கை சென்று, பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன்பின்பு, நாடு திரும்ப திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

Tags : trip ,Youth Bicycle Campaign ,
× RELATED சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!