மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.28:  டெல்லியில் நடந்த வன்முறையை தடுக்கத் தவறிய மத்திய பாஜ அரசை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஹபிபுல்லா தலைமை வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் கண்டன உரையாற்றுகையில், “டெல்லியில் நடைபெற்றது கலவரம் அல்ல, திட்டமிட்ட வன்முறை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்படும் என பாஜ தலைவர் வெளிப்படையாக அறிவித்த  நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையும், கலவரக்காரர்களுடன் கைகோர்த்து செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வெளியூர்களிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு, குறிவைத்து தாக்கியிருக்கிறார்கள். கடைகள் சூறையாடப்பட்டு, பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன. வழிபாட்டுத்தலங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. தெருவில் நடந்து சென்ற அப்பாவி மக்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த தாக்குதலை, காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. வன்முறையின் மூலம் அறவழிப்போராட்டங்களை ஒடுக்க முடியாது. நாட்டில் எத்தகைய வன்முறைக்கும், மதத்திற்கும் இங்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மோடி இதுவரை ஆறுதல் தெரிவிக்கவில்லை” என்றார். இதில் மாவட்டச் செயலாளர் அம்ஜத்கான், மாவட்ட பொருளாளர் மன்சூர் அகமது, மாவட்ட துணைத்தலைவர் ஜெய்னுல் ஆபீதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் காமில்பாஷா, ஹசன் பாஷா, நைனார் முகம்மது, ஜாகீர்உசேன், கலீல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: