ஆவினில் 17 இயக்குநர் பதவிக்கு 43 பேர் மனு தாக்கல் இன்று வேட்பு மனு பரிசீலனை

மதுரை, பிப்.28:  மதுரை ஆவினில் 17 இயக்குநர் பதவிக்கு 43 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மதுரை மற்றும் தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மதுரை ஆவினுக்கு 17 பேர்  இயக்குநர்களாக கடந்த 2018ல் தேர்வு செய்யப்பட்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தம்பி ஓ.ராஜா ஆவின் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்,  கடந்தாண்டு ஆக.22ம் தேதி மதுரையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு என ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. இதனால், மதுரையிலிருந்த சேர்மன் ஓ.ராஜா உள்ளிட்ட 6 இயக்குநர்கள் தேனி ஆவினுக்கு சென்றனர். இதன்பிறகு மீதியுள்ள 11 பேர் இயக்குநர்களாக இருந்தனர். இந்நிலையில், மதுரை ஆவினுக்கு இயக்குநராக இல்லாத முன்னாள் எம்எல்ஏ தமிழரசன்,  தேர்தல் நடத்தாமல் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரை தலைவராக நியமித்தனர். அவரது நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழரசன் நியமனம் செல்லாது. தேர்தல் மூலம் புதிய நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரை ஆவினுக்கு புதிதாக 17 இயக்குநர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதில் 3 இயக்குநர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவுக்கும், 5 பெண்கள், 9 பொது என்ற இடஒதுக்கீடு அடிப்படையில் இயக்குநர்கள் தேர்வு செய்ய வேண்டும்.  புதிய இயக்குநர்கள் தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மதுரை ஆவினில் நடந்தது.  தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை பதிவாளர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் அழகுராஜ், முருகன் ஆகியோர் இருந்தனர். இவர்களிடம் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் தலைமையில் 17 பேர் ஊர்வலமாக வந்து, வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதேபோன்று, பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பிலும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், மொத்தம் 43 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் குறித்த விபரம் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. வேட்பு மனுக்கள் நாளை (பிப்.29) மாலை 4 மணி வரை திரும்ப பெறலாம். 5 மணிக்குள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். போட்டியிருந்தால், மார்ச் 4ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். மார்ச் 5ம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்று வெற்றி பெற்ற வேட்பாளர் விபரம் அறிவிக்கப்படும். அதனை தொடர்ந்து மார்ச் 9ம் தேதி தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. 

Related Stories: