படியுங்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் திட்ட ஆய்வு கூட்டம்

திண்டுக்கல், பிப். 28: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யக்ராம் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத்துறை) கந்தசாமி முன்னிலை வகித்தார். தேசிய சிறுபான்மையின ஆணைய துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தலைமை வகித்து பேசுகையில், ‘பாரத பிரதமர் சிறுபான்மையினர் நலனுக்காக புதிய 15 அம்ச திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சிறுபான்மையினர் மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெற்று தங்களது வாழ்வில் ஏற்றம் காண வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கல்வி உதவித்தொகை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான உதவித்தொகை, ஓய்வூதியம், பாரத பிரதமரின் அவாஸ்யோஜன போன்ற பல்வேறு உன்னதமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன’ என்றார்.தொடர்ந்து கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் சிறுபான்மையினருக்கு செய்து வரும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் நன்முறையில் செயலபடுத்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யக்ராம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாநகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் திண்டுக்கல் நகரில் சிறுபான்மையின மக்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த தேவையான திட்டங்களை சரியாக மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கீடு கோரி திட்ட முன்மொழிவுகள் அனுப்பி வைக்குமாறு துறை அலுவலருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. பின்னர் சிறுபான்மையின மதத்தலைவர்களுடன் கருத்துகள், ஆலோசனை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் தலைமை ஹாஜி, திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்தவ குருக்கள், கன்னியாஸ்திரிகள், சிஎஸ்ஐ, பெந்தேகொஸ்தே தலைமை பாஸ்டர், சிறுபான்மையினர் நல அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: