×

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வாகன உரிமையாளர்கள் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு: போலீசார் நடவடிக்கை

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் 1 முதல் 8வது பிரதான சாலைகள் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். மேற்கண்ட சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும், இதனால் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று காலை போக்குவரத்து காவல் உதவி கமிஷனர் சுரேந்திரநாத் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போக்குவரத்து போலீசார், மேற்கண்ட பிரதான சாலை மற்றும் நடைபாதைகளை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், சாலை மற்றும் நடைபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த கார், ஆட்டோ, பைக் மற்றும் சரக்கு வாகனங்களை கிரேன் உதவியுடன் அதிரடியாக அகற்றினர். மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலா ₹300 அபராதம் வசூலித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘‘சாலையோரம் பெரிய அளவில் கடைகளை நடத்துபவர்கள், தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’’ என்றனர். துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதாகவும், அதிக பாரம் ஏற்றி செல்வதாகவும் திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து ஆர்டிஓ யுவராஜ், வட்டார போக்குவரத்து அலுவலக செயலாளர்கள் பிரிவு அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருணாச்சலம், சுந்தர்ராஜ் கொண்ட தனிப்படையினர் அக்கரை சோதைச் சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அதிவேகம் மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த 25 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : owners ,Police action ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு