திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ₹2 லட்சம் கையாடல்: ˜ கோயில் ஊழியர்களிடம் விசாரணை ˜ பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் கிடைத்த ₹2 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில் நிர்வாக அதிகாரியாக இருந்தவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.  108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராபத்து உற்சவத்தில் முதல்நாளான கடந்த ஜன.6ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, கடந்த ஜன.5ம் தேதி சொர்க்கவாசல் திறப்பை காண 1000 பேருக்கு 500 சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. இதன் மூலம் கோயில் நிர்வாகத்துக்கு 5 லட்சம் வரை வருவாய் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. ஆனால், கோயில் நிர்வாகத்தின் கணக்கில் 3 லட்சம் மட்டுமே வரவு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 மீதமுள்ள 2 லட்சம் வருவாய் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, கோயில்களின் கணக்கை ஆய்வு செய்ததில் டிக்கெட் விற்றதன் மூலம் கிடைத்த பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பணிபுரிந்து வரும் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் இணை ஆணையர் நிலையிலான அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கோயில் ஊழியர் ஒருவர், இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் தான் கோயில் வங்கி கணக்கில் இந்த பணத்தை வரவு வைக்காமல் கையாடல் செய்து இருப்பதாக வாக்குமூலம் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பேரில், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கமிஷனர் பணீந்திர ரெட்டிக்கு அறிக்கை அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அந்த நிர்வாக அதிகாரி மீது கமிஷனர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருப்பதாக அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: