கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்: மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

துரைப்பாக்கம்: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்குட்பட்ட துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர், 8வது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் பட்டு வருகிறது.  இந்நிலையில், பைப்லைன் உடைப்பு காரணமாக இப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று 15 மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களது புகார் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனை எதற்கும் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால், அலட்சிய போக்குடன் பதிலளிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுபற்றி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: