சென்னை மாவட்டத்தில் இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:  கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள 33387 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 28ம் தேதி (இன்று) முதல் வருகிற 19ம் தேதி முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4  மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: