×

ஆவணங்களை வாங்கி கொண்டு பல லட்சம் கடன் பெற்று மோசடி அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் கொடுத்ததால் பரபரப்பு

அரியலூர், பிப். 28: அரியலூர் மாவட்டம் பாளையக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிளிமங்கலம், வாளரக்குறிச்சி கிராம பெண்களிடம் பயிர் கடன் பெற்று கொடுங்கள். நான் கட்டிக்கொள்கிறேன் எனக்கூறி கிராம பெண்களிடம் ஆவணங்களை வாங்கி தனியார் வங்கியில் பணம் பெற்றுகொண்டு திரும்ப செலுத்தாத முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக பிரமுகருமான முத்தமிழ்வீரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராமபொதுமக்கள் இரும்புலிக்குறிச்சி காவல்நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக பாளையக்குடி ஊராட்சி மன்றத்தலைவராக பொறுப்பில் இருந்தவர் முத்தமிழ்வீரன். அதிமுக பிரமுகரான இவர் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கிளிமங்கலம் கிராமத்தின் காலனி பகுதியில் வசிக்கும் பெண்களிடம் உங்கள் ஆவண்ங்களை கொண்டு பயிர்க்கடன் எடுத்துக்கொடுங்கள் நான் கட்டி விடுகிறேன். அதன்பிறகு நீங்கள் வங்கியில் தொடர்ந்து கடன் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி பெண்களிடம் ஆவணங்களை கொடுத்து கையொப்பம் இடுங்கள் என்று கூறி அரியலூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து தலா ஒருவர் மீது 50 ஆயிரம் வீதம் கடன் பெற்று அந்த தொகையை வைத்துக்கொண்டார்.

5 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாளையக்குடி பகுதி தலித்திற்கு ஒதுக்கப்பட்டது. தலித் சமூகத்தின் சார்பாக நின்ற ஒருவர் வெற்றிபெற்றதால் அப்பகுதி பெண்களிடம் வாங்கிய தொகையை கட்டமுடியாது என்று கூறியதுடன் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் கிராமத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் கடன்பெற்றவர்கள் வட்டியுடன் சேர்த்து ஒருவர் ரூ.70 ஆயிரம் வீதம் கட்டவேண்டும் என்றும் தவறினால் வீடுகள் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று மிரட்டல் விடுத்தனர். அப்பொழுதுதான் தாங்கள் கையொப்பமிட்டு வங்கியில் வாங்கிய தொகையை அதிமுக பிரமுகராக முத்தமிழ்வீரன் கட்டவில்லை என்று அதிர்ச்சி அடைந்த கிராமபொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இரும்புலிக்குறிச்சி பகுதி காவல்நிலையத்திற்கு வந்து மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் முத்தமிழ்வீரன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.இது தொடர்பாக கூறிய பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டில் தங்களது கணவர்களுக்கு தெரியாமல் அடையாள ஆவணங்களை கொடுத்து கையெழுத்து போட்டுவிட்டோம் என்றும் தற்பொழுது வங்கி அதிகாரிகள் வீட்டிற்கு வந்து கடனை கட்டவேண்டும். இல்லையேல் வீடு ஜப்தி செய்வோம் என கூறும்போதுதான் தாங்கள் ஏமாந்தது தெரிய வந்ததாகவும் ஆளுங்கட்சியினர் என்பதால் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் 3 கிராம பொதுமக்களிடம் சுமார் 25 லட்சத்திற்கு மேல் ஏமாற்றி மோசடி செய்த அதிமுக பிரமுகரான முத்தமிழ்வீரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police station ,millions ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்