×

சுந்தரபெருமாள்கோவில் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி புகார் ஊழியர் வராததால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

கும்பகோணம், பிப். 28: சுந்தரபெருமாள்கோவிலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை குறைவான பிரச்னையால் ஊழியர்கள் மற்றும் லோடுமேன்கள் பணிக்கு வராததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாவிட்டால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.கும்பகோணம் அடுத்த சுந்தரபெருமாள்கோயிலில் கடந்த 18ம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு சுந்தரபெருமாள்கோவில், உத்தாணி, திருமேற்றழிகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்தனர். கடந்த 23ம் தேதி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நெல் மூட்டைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடை, கொள்முதல் செய்த கணக்குகள் சரியாக இருந்தது.அப்போது நெல் மூட்டைகளை அதிகளவில் கொள்முதல் செய்வதால் அதிகமாக தேங்கியுள்ளது என்று ஊழியர்கள் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் அன்று மாலை 3 லாரிகள் மூலம் 2,000 மூட்டைகளை திருநாகேஸ்வரம் நவீன நெல் அரவை மில்லுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மறுநாள் காலை (24ம் தேதி) லாரியில் வந்த நெல் மூட்டைகளில் ஒரு மூட்டைக்கு 2 கிலோ வீதம் குறைகிறது என புகார் எழுந்தது.

இதனால் சுந்தரபெருமாள்கோவி–்லில் உள்ள ஊழியர்கள் மற்றும் லோடுமேன்கள் அனைவரும் சேர்ந்து குறையும் நெல்லுக்கான தொகையை செலுத்த வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டனர்.அதற்கு நெல் மூட்டைகளை எடை போட்டது லோடுமேன்கள். அதனால் லோடுமேன்கள் தான் தொகையை செலுத்த வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக பணிக்கு வராமல் கொள்முதல் நிலைய ஊழியர் இருந்து விட்டார். இந்நிலையில் கலெக்டர் எடையை சோதனையிட்டபோது சரியாக இருந்தது. தற்போது எப்படி எடை குறைகிறது என்று புரியாமல் லோடுமேன்கள் இருந்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சுந்தரபெருமாள்கோவிலில் ஆண்டுதோறும் திறக்கப்படும் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது சரியாக இருக்கிறது என கூறினர். ஆனால் அன்று மாலை லாரியில் ஏற்றி அனுப்பப்பட்ட நெல் மூட்டைகளில் தலா 2 கிலோ குறைந்துள்ளது என புகார் வந்தது கேள்வி குறியாகியுள்ளது.

லாரியில் ஏற்றி அனுப்பப்பட்ட நெல் மூட்டைகளில் ஒவ்வொரு மூட்டைக்கும் தலா 2 கிலோ குறைந்துள்ளதால் ரூ.50 ஆயிரம் வரை செலுத்த வேண்டியுள்ளது. அங்கு கொள்முதல் நிலையத்தில் மேலும் 2 ஆயிரம் மூட்டைகள் இருப்பு உள்ளது. அதை எடை போட்டு பார்த்தாலும் மூட்டைக்கு 2 கிலோ குறைய வாய்ப்பு இருப்பதால் ஊழியர்கள், லோடுமேன்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் ஊழியர்கள், லோடுமேன்கள் கொள்முதல் நிலையத்துக்கு வராததால் கடந்த 4 நாட்களாக விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர்.தற்போது 10 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் தேங்கி கிடப்பதால் இரவு பெய்யும் பனி மற்றும் பகலில் அடிக்கும் வெயிலால் நெல்கள் தரம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரங்களில் நெல் மூட்டைகள் திருட்டு போக வாய்ப்புள்ளது. எனவே கூலிக்கு விவசாயிகளை நியமித்து நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகிறோம். வட்டிக்கு பணம் வாங்கி நெல் சாகுபடி செய்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனையுடன் உள்ளோம்.கொள்முதல் நிலைய அதிகாரிகள் வழங்கிய எடை மெஷினில் பிரச்னையா அல்லது திருநாகேஸ்வரம் நவீன ரைஸ் மில்லில் உள்ள எடை மிஷினில் பிரச்னையா என்பது சுந்தரபெருமாள்கோவில் ஊழியர், லோடுமேன்கள், விவசாயிகள், உயரதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே எடை பிரச்னைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். உடனடியாக சுந்தரபெருமாள்கோவிலில் உள்ள கொள்முதல் நிலையத்தை திறந்து தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.




Tags : Sundaraberumalko Purchase Station ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா