×

நாகை அருகே துணிகரம் நள்ளிரவில் வீடு புகுந்து 2 பெண்களிடம் 16 பவுன் நகை பறிப்பு தடுத்த டிரைவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல்

கீழ்வேளூர், பிப். 28: நாகை அருகே முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் டிரைவரை தாக்கி16 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பொரவாச்சேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்(60), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி பொன்னீஸ்வரி(50), இவர்களது வீட்டுக்கு 2 தினங்களுக்கு முன் பன்னீரின் தங்கை ராணி(48) சென்னையில் இருந்து வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் 3 மர்ம நபர்கள் பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு தூங்கி கொண்டிருந்த ராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் திருடர்களை பார்த்து அலறினார்.
இதனால் அருகில் தூங்கி கொண்டிருந்த பொன்னீஸ்வரி எழுந்தார். அப்போது அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினையும் பறித்துக்கொண்டனர். செயினை இழுத்து பறித்ததால் இருவருக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இவர்களது சத்தம் கேட்டு அடுத்த அறையில் தூங்கிகொண்டிருந்த பன்னீர் எழுந்து ஓடிவந்தார். அங்கு 3 கொள்ளையர்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவர் கொள்ளையர்களை தாக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் தயாராக வைத்திருந்த இரும்பு குழாயால் தாக்கினர். இதில் பன்னீர் மண்டை உடைந்தது.அப்போது பன்னீர் அணிந்திருந்த செயின், மோதிரம் ஆகியவற்றையும் கழற்றிக்கொண்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன தங்கம் மொத்தம் 16 பவுன். ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.கொள்ளையர்கள் தாக்கியதிலும், செயினை பறித்ததாலும் காயமடைந்த 3 பேரையும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த கொள்ளை தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்கள் 3பேரும் லுங்கி, சட்டை அணிந்திருந்தனர். அவர்களுக்கு 40 அயதுக்குள் இருக்கும்.

Tags : robbery attack ,house ,Nagarai ,
× RELATED புத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் மது பாட்டிலால் குத்தி கொலை