×

தூத்துக்குடி மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெறாமல் ரூ.7.5 கோடி வளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு

தூத்துக்குடி, பிப்.28: தூத்துக்குடி மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெறாமல் ரூ.7.5 கோடியை வளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் 5 ஊராட்சி உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் கடந்த ஜன.11ம்தேதி நடந்தது. அன்றே நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். கடந்த 26ம்தேதி தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி கவுன்சிலின் முதல் கூட்டம் நடந்தது. ஆனால் கடந்த 14ம்தேதியே மாவட்ட வளர்ச்சிக்கான நிதி ரூ.7.5 கோடியை விளாத்திகுளம், புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட குளங்களில் தூர்வாருவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பிரம்மசக்தி, அருண்குமார், ஜெஸி பொன்ராணி, தங்ககனி, மிக்கேல் நவமணி ஆகியோர் கலெக்டர் சந்தீப்நந்தூரியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் 3 ஆண்டுகள் தாமதத்திற்கு பின்பு ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல்கள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. உறுப்பினர்கள் ஜன.5ம்தேதி பதவியேற்றனர். தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஜன.11ம்தேதி நடைபெற்று அன்றே பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கான நிதி ரூ.7.5 கோடியை மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நடத்தி முடிவு செய்து திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யாமல் முன்கூட்டியே கடந்த 14ம்தேதி டெண்டர் விடப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு புறம்பான செயலாகும். ஆளுங்கட்சியின் அறிவுறுத்தலால் சட்டவிதிகளுக்கு புறம்பான செயலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். 14ம்தேதி விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து அந்த நிதியை திரும்ப பெற்று மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கூறியதாவது; தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெறாமல் முன்கூட்டியே ரூ.7.5 கோடியை விளாத்திகுளம், புதூர் ஒன்றியத்திலுள்ள குளங்கள் தூர்வாருவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது மிகப்பெரிய மோசடியாகும். ஆளுங்கட்சியினர் இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் முன்கூட்டியே டெண்டர் விட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்ய திட்டமிட்டு இச்செயலை செய்துள்ளனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனை ரத்து செய்யாவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.இதில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் ஜோதிராஜா, வழக்கறிஞர்கள் ரகுராமன், பூங்குமார், பாலா, கிஸிங்கர், மனோஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் வீரபாகு, மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.




Tags : meeting ,Tuticorin District Council ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...