சாத்தான்குளம் அருகே சிதிலமடைந்து கிடக்கும் ஞானியார்குடியிருப்பு புதுக்குளம் இணைப்பு சாலை

சாத்தான்குளம், பிப்.28: சாததான்குளம் அருகே 7 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் ஞானியார்குடியிருப்பு -புதுக்குளம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட புதுக்குளத்தில் இருந்து ஞானியார்குடியிருப்பு வரை  2கி.மீ தூரமுள்ள இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அரசு பேருந்து மற்றும் ஞானியார்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், மற்றும் கிராமமக்கள் சென்று  திரும்புகின்றனர். இந்த சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக  சிதிலமடைந்து  குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால்  இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து ஒன்றிய, ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பழுதான சாலையை காரணம்  காட்டி  அரசு பஸ், மினிபஸ்   இந்த சாலை வழியாக செல்வதை  சில நேரம் புறக்கணித்து செல்கின்றன. இதனால் கிராம மக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே அதிகாரிகள்  சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் பாலமேனனிடம் கேட்டபோது.  சீரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: