×

வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கான நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் 17 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால் போட்டி இல்லை

வேலூர், பிப்.28: வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கான நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது. இதில் 17 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி சி.1325 வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவிற்கு தகுதிவாய்ந்த 17 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது.அதன்படி, வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கான நிர்வாகக்குழு தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான துணைப்பதிவாளர் (பால்வளம்) ஜெயவேலு வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார். காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. காலை 11 மணிவரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

தொடர்ந்து, மாலை 5 மணி வரையில், 17 உறுப்பினர்களுக்கு 17 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் 17 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேட்புமனுக்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து தேர்தல் அலுவலர் சார்பதிவாளர்(பால்வளம்)ஜெயவேலு கூறுகையில், ‘17 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் இன்று(நேற்று) பெறப்பட்டது. இதில் 17 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் போட்டி இல்லை, 17 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவர். 17 பேரின் மனு குறித்து நாளை(இன்று) மாலை அறிவிக்கப்படும்’ என்றார்.

Tags : Vellore District Dairy Producers Co-operative Union ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்