விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மா, தென்னை மரங்களை பராமரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

வேலூர், பிப்.28: விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மா, தென்னை மரங்களை பராமரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தேசிய தோட்டக்கலை வாரியம் சென்னை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் விரிஞ்சிபுரம் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான மா மற்றும் தென்னைக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் பங்காருகிரி, முன்னோடி வங்கியின் முதன்மை மேலாளர் ஜான் தியோடசியஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாண்டி, வேளாண் துணை இயக்குனர் பாலா ஆகியோர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தோட்டக்கலை துறைக்கான சிறப்பு திட்டங்கள், வங்கியை அணுகும் முறைகள், கடன் பெறும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எளிதாக எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து மா, தென்னை மரத்தை பராமரிக்கும் முறைகள், நடைமுறைகள் உரம் மற்றும் நீர் நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து பேராசிரியர்கள் திலகம், சதீஷ், வீரமணி, அம்பிகா, பிரபு ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: