×

விட்டுப்போன விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு வழங்க வேண்டும்

திருவாரூர், பிப்.28: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம்எல்ஏ தொகுதியில் விவசாயிகளுக்கு விடுபட்டுப்போன பயிர் காப்பீடு தொகையினை வழங்கக்கோரி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நேற்று கலெக்டர் ஆனந்திடம் மனு அளித்தார். இதுகுறித்து அவர் மனுவில் கூறியிருப்பதாவது:டெல்டாபகுதி முழுவதும் கடந்த 2018-19 ஆம் ஆண்டு வறட்சி மற்றும் கஜா புயலினால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது வெளிவந்துள்ள 2018 - 19ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பட்டியலில் மன்னார்குடி தொகுதியில் இருந்து வரும் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள காளாச்சேரி, காரக்கோட்டை, காளாஞ்சிமேடு, அரிச்சபுரம் மற்றும் மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள மேலவாசல், மகாதேவபட்டினம் (2), துளசேந்திரபுரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, திருப்பாலக்குடி (1) மற்றும் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சேரி கண்டமங்கலம், மருதவனம், திருமக்கோட்டை ,தென்பரை உட்பட பல்வேறு வருவாய் கிராமங்கள் இடம் பெறாததால் விவசாயிகள் மிகுந்த துயரத்துடன் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் பல இடங்களில் விளைச்சல் இழப்பீட்டை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக கோவில்வெண்ணி, சேகரை, பேரையூர், ராயபுரம், ராதா நரசிம்மபுரம், கூப்பாச்சிக்கோட்டை, கீழாள வந்தசேரி, மேலாள வந்தசேரி , சித்தாம்பூர், எடமேலையூர் மற்றும் புதுதேவன்குடி ஆகிய கிராமங்களில் விளைச்சல் மாதிரிகள் எடுப்பதில் பெரிய தவறுகள் நடைபெற்றுள்ளன என்று விவசாயிகள் குமுறி வருகின்றனர்.

எனவே கஜா புயலினால் மீளா முடியாத அளவிற்கு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தற்போது பயிர் காப்பீட்டுத் தொகையும் கிடைக்காது பெருத்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 573 வருவாய் கிராமங்களில் 178 கிராமங்களில் இது போன்று பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் அடுத்த நிதியாண்டு தொடங்க இருப்பதால் இந்த நிதியானது திரும்பி செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.
எனவே காலம் தாழ்த்தாமல் அனைத்து கிராமங்களுக்கும் ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு பயிர் காப்பீடு வழங்க தவறும்பட்சத்தில் விவசாயிகளை திரட்டி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு எம்எல்ஏ டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு