×

ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் 45 லட்சம் பெண் பக்தர்கள் பங்கேற்கும் பொங்கல் விழா மார்ச் 9ம் தேதி நடக்கிறது

நாகர்கோவில், பிப்.28: ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் 45 லட்சம் பெண்கள் பங்கேற்கின்ற பொங்கல் விழா வரும் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளது. ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் அறக்கட்டளை தலைவர் சசிதரன்நாயர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருவனந்தபுரம், ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்காலை விழா வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 9ம் விழாவான மார்ச் 9ம் தேதி பொங்கல் விழா நடக்கிறது. இந்த விழாவில் கேரளம் மட்டுமின்றி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் பக்தர்கள் வருகை தருகின்றனர். அன்று காலை 10.20 மணிக்கு பொங்கல் விழா நடந்த பின்னர் பிற்பகல் 2.10 மணிக்கு பொங்கல் நெய்வேத்தியத்துடன் விழா நிறைவடையும். அன்று கோயிலை சுற்றிலும் சுமார் 10 கிமீ தூரத்திற்கு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுவர்.

  பொங்கல் விழாவில் பச்சை செங்கல்கள் பயன்படுத்த கூடாது, பிளாஸ்டிக் பயன்பாடு கூடாது. சாலையில் டைல்ஸ் ஒட்டப்பட்ட இடங்களில் பொங்கல் அடுப்பு வைக்க கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவில் ஆண்டுதோறும் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் 45 லட்சம் பெண் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் மற்றொரு முக்கிய நிகழ்வான குத்தியோட்டம் நிகழ்ச்சி மார்ச் 3ம் தேதி நடக்கிறது. இதில் 803 குழந்தைகள் பங்கேற்க இதுவரை பதிவு செய்துள்ளனர். விழா தொடக்க நாளான மார்ச் 1ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடிகை அனுசித்தாரா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது நிர்வாகிகள் பிரதீப், நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : festival ,Pongal ,river ,devotees ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்