×

மதுபான ஆலை கழிவுகளால் கடும் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு, பிப். 27: மதுபான ஆலை கழிவுகளால், கடும் அவதிப்படுவதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தை இருங்குன்றம்பள்ளி கிராம மக்கள் முற்றுகையிட்டு, புகார் அளித்தனர். இதனால், செங்கல்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி இருங்குன்றம்பள்ளி.  பாலாற்றங்கரையில் மோகன் புருவரீஸ் என்ற தனியார் மதுபான அலை செயல்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை சேமித்து வைக்க கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள இடங்களை, ஏரிபோன்று அமைத்து, அங்கு தேக்கி வைத்துள்ளனர். மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல்களையும் அப்பகுதியில் கொட்டுகின்றனர்.இதையொட்டி, தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றி கொட்டப்படும் கழிவு பொருட்கள், காற்றில் பறந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் படிந்து விடுகிறது. இதனால், வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாகின்றன. மேலும், காற்றில் பறந்து வரும் சாம்பல் மற்றும் கழிவுகளால் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் சுவாச கோளாறு, மர்மக் காய்ச்சல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 2 நாட்களாக கழிவுகள் பறந்து வருவது அதிகமானதால் கிராம மக்கள், வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கிராம மக்கள், உணவு சமைக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். முகத்தில் துணி கட்டியவாறே நடமாடுவதுடன், தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.இந்நிலையில், கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் மேற்கண்ட மதுபான தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். அப்போது, மதுபான ஆலையில் இருந்து வெளியேறும் தூசிகள் மற்றும் நுறைகளை கட்டுப்படுத்த வேண்டும். காற்று மாசு ஏற்படுத்தும் மதுபான தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் சென்ற மக்கள், அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து கலெக்டர் ஜான்லூயிஸ், அவர்களிடம் சமரசம் பேசினார். பின்னர், பொதுமக்களிடம் புகார் மனுவை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுபான ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை 20 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் ஏரிபோல் தேக்கி வைத்துள்ளனர். இந்த கழிவு நீரால் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்து, பல நேரங்களில் குழாயில் வரும் குடிநீர் கருப்பு நிறத்தில் உள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல் உள்ளிட்ட கழிவுகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதியில் படிந்து விடுகிறது.இதனால், உணவு சமைக்க முடியவில்லை, குடிதண்ணீரை திறந்து வைக்க முடியவில்லை, துவைக்கும் துணிகளை காயப்போட முடியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த கழிவுகளால் சுவாச கோளாறு, கண் எரிச்சல் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த ஆலையை ஆய்வு செய்து அவர்கள் தேக்கி வைத்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பாலாற்று பகுதியில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைகிறது.
செங்கல்பட்டு, மாமண்டூர், ஆலப்பாக்கம், ஓழலூர், மேலமையூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த மதுபான ஆலையை ஒட்டியுள்ள பாலாற்று பகுதியில் இருந்து போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...