மண்ணச்சநல்லூர் அருகே இரண்டரை கி.மீ. தூரம் பல்லாங்குழியாக மாறிய சாலை

மண்ணச்சநல்லூர், பிப்.27: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தழுதாழைபட்டி கிராமம் தண்ணீர் பந்தலில் இருந்து 94-கரியமாணிக்கம் சாலை வரை இரண்டரை கி.மீ. சாலை பல்லாங்குழியாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தடுமாறி திணறியபடியே செல்கின்றன. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புத்தனாம்பட்டி வரை செல்லும் 36 ஏ பேருந்து நாளொன்றுக்கு பத்து முறை சென்று வருகின்றன. இதைத்தவிர இரண்டு தனியார் பேருந்துகள், 6 பள்ளி வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. மேலும் தழுதாழைபட்டியில் வசிக்கும் பெரும்பாலான பெண்களும் ஆண்களும் கட்டுமானத் தொழிலுக்கு செல்வது வழக்கம். இவர்கள் காலை 9 மணிக்குள் திருச்சி அண்ணா சாலை மாம்பழச்சாலை திருவானைக்காவல் ஆகிய பகுதிகளில் இறங்கி ஒவ்வொரு பகுதியாக வேலைக்கு செல்வார்கள்.

Advertising
Advertising

இது தவிர பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தழுதாழைபட்டியிலிருந்து பேருந்தில் பயணிக்கின்றனர். குண்டும் குழியுமாக இருப்பதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சில ஊருக்குள் வருவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் கால தாமதத்துடன் செல்வதால் மிக சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் கூறுகையில், இந்த சாலை மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை. கடந்த 8 ஆண்டுகளாக இதே நிலையில்தான் இச்சாலை உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை நடைபெறவில்லை. எனவே தழுதாழைப்பட்டி கிராம மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் தெரிவித்தார்.

கல்லூரி மாணவி லட்சுமி பிரியா என்பவர் கூறுகையில், நான் காலையில் கல்லூரிக்கு செல்லும்போது பேருந்து காலதாமதம் ஏற்பட்டால் டோல்கேட்டில் இறங்கி தனியார் பஸ்சில் செல்ல நேரிடுகிறது. இதனால் குறித்த நேரத்திற்கு பஸ் வந்தால் நான் கல்லூரி பஸ்சில் சென்று விடுவேன். கல்லூரி பஸ்சிற்கு வருடத்திற்கு ஒருமுறை பணம் கட்டி இருக்கிறேன். பஸ் முறையாக வராத காரணத்தால் காலதாமதம் ஏற்படுவதால் நான் டோல்கேட்டில் இருந்து தனியார் பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணிக்க நேரிடுகின்றன. எனவே எங்கள் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கருத்தில்கொண்டு அரசு அதிகாரிகள் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்றார். போர்க்கால அடிப்படையில் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: