×

உணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம்

பொன்னமராவதி, பிப். 27: உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பொன்னமராவதியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம் அளித்தார்.பொன்னமராவதி வர்த்தகர் கழக மண்டபத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்டநியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன், செயலாளர் முகமது அப்துல்லா, பொருளாளர் தேனப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட அலுவலர் ரமேஷ்பாபு பேசியதாவது: பொன்னமராவதி பகுதியில் உணவு வணிகர்களில் 75 சதவீதம் பேர் பதிவு செய்து உரிமம் பெற்றுள்ளனர். மீதமுள்ள அனைத்து வணிகர்களும் லைசன்ஸ் பெறவேண்டும். ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் பதிவுச்சான்று ரூ.100, உரிமம்-விற்பனையாளர் சேர்த்து ரூ.2 ஆயிரம், தயாரிப்பாளர் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.

பொட்டலமிடப்பட்ட உணவுகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் முகவரி, உணவு பாதுகாப்புத்துறை பதிவு-உரிமம் எண், பேட்ஜ் எண், வெஜிடேரியன், நான்வெஜ் சின்னம், ஊட்டச்சத்து விபரங்கள், சேர்மானங்களின் விபரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை தயாரிப்பதோ விற்பனை செய்யவோ கூடாது.தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களான பான்மசலா மற்றும் குட்கா போன்றவைகளை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. டீக்கடைகளில் உணவுப்பொருட்களை மூடிய கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தூசி படியா வண்ணம் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும்.ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணையை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது. உணவு பொருள் தயாரிப்பிற்கு சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும். விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் முறையாக ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து இது குறித்த படம் காண்பிக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அருண்பிரகாஷ், கார்த்தி மற்றும் உணவு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : awareness camp ,Ponnamaravathi ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு முகாம்