×

₹26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: கலெக்டருக்காக காத்திருந்தனர்

திருவண்ணாமலை, பிப்.27: போளூர் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ₹26 கோடியை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத்தரக்ேகாரி, கரும்பு விவசாயிகள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் ஆய்வுக்காக வெளியே சென்றிருந்ததால் அவருக்காக விவசாயிகள் காத்திருந்தனர். போளூர் தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சுமார் ஒன்னரை ஆண்டுகளாக ₹26 கோடி தொகையை வழங்காமல் ஆலை நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. இதுதொடர்பாக, கரும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

மேலும், நடப்பு பருவத்தில் சர்க்கரை ஆலை அரவையை தொடங்கவில்லை. சாகுபடி செய்த கரும்பை ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்யவில்லை. எனவே, விளை நிலத்திலேயே காய்ந்து, கருகி கரும்பு எடையிழந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.எனவே, தரணி சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு, போளூரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நடந்திய பேச்சுவார்த்தையில், தரணி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த சுமார் 55 ஆயிரம் ஏக்கர் கரும்பை மற்ற ஆலைகளுக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 10 ஆயிரம் டன் கரும்பும், செங்கம் அருகேயுள்ள பன்னாரி சர்க்கரை ஆலைக்கு 45 டன் கரும்பும் வழங்க முடிவானது.

மேலும், கரும்பு கொள்முதல் தொகையை, நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ெதாடர்ச்சியாக, கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட திருவண்ணாமலை அலுவலகத்துக்கு நேற்று மாலை விவசாயிகள் வந்தனர். பின்னர், கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.அதைத்தொடர்ந்து, ஆய்வுப் பணிக்காக கலெக்டர் வெளியூர் சென்றிருந்ததால், மாலை 6 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

போளூர் அருகே உள்ள தனியார் சக்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நேற்று, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : collector ,office ,
× RELATED விவசாயிகளுக்கு வழங்கப்படும்...