அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் எருது விடும் விடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகள்: 14 பேர் காயம்

அணைக்கட்டு, பிப். 27: அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில், எதிர்பாரதவிதமாக மாடு முட்டி 14 பேர் காயமடைந்தனர். அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தில் மயானகொள்ளை திருவிழாவை முன்னிட்டு 52ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி விழாவை தொடங்கி வைத்தார். காலை 9.30 மணியளவில் தொடங்கிய விழாவில் வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், கீழ்கொத்தூர், ஏரியூர், வரதலம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 233 மாடுகள் பங்கேற்றன. மாடுகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து ஒவ்வென்றாக வீதியில் அவிழ்த்துவிடபட்டது.

விழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். தொடர்ந்து விழா 2 மணியளவில் முடித்து கொள்ளபட்டது. விழாவில் எல்லைக்கோட்டை குறைந்த நேரமான 9.14 வினாடிகளில் ஓடி கடந்த கடலூர் எக்ஸ்பிரஸ் வரலாறு என்ற காளை மாட்டிற்கு முதல் பரிசாக ₹70ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த பல்லவன் எக்ஸ்பிரஸ் என்ற மாட்டிற்கு ₹50ஆயிரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவினை தாசில்தார் முரளிகுமார், வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், விஏஒ ஸ்ரீராஜ் மற்றும் வருவாய் துறையினர் கண்கானித்தனர். மேலும், விழாவையொட்டி வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மனோன்மணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் சீறிபாய்ந்த மாடுகள் முட்டியது மற்றும் சிதறி ஓடி விழுந்ததில் காயமடைந்த 14 பார்வையாளர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

காளையை துன்புறுத்திய இளைஞருக்கு தர்ம அடி

அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தில் நேற்று நடந்த காளைவிடும் விழாவில் வீதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் சீறிபாய்ந்து ஓடும் மாடுகளை பிளேடால் கிழிப்பது, கம்பால் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அதை கவனித்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை எச்சரித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து அதே போல் செய்து கொண்டிருந்தார். மேலும், ஒரு மாட்டிற்கு பிளாடால் கிழிந்து ரத்தம் வடிந்ததால், ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து அந்த நபருக்கு தர்ம அடி கெடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் விழா நிறுத்தப்பட்டது. மேலும், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: