வேலூர் மாவட்டத்தில் 2ம் தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் : வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

வேலூர், பிப்.27: வேலூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த 9 மாவட்டங்களில் 3 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டார். அப்போது ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) புருஷோத்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் தேசிய தகவல் மையம் மூலம் மாவட்ட கெஜட்டில் (https://vellore.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.இதுதவிர வரும் 2ம்தேதி நடத்தப்பட உள்ள கருத்துக்கேட்பு கூட்டத்திலும் பங்கேற்று குறைகள் இருந்தாலும், ஆட்சேபனையும் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரம் : வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் அணைக்கட்டில் 247 வாக்குச்சாவடிகளும், குடியாத்தத்தில் 280, கே.வி.குப்பத்தில் 209, கணியம்பாடியில் 119, காட்பாடியில் 215, பேரணாம்பட்டில் 126, வேலூரில் 97 என மொத்தம் 1293 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டங்களிலும் மொத்தம் 377 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. பேரூராட்சி வாரியாக ஒடுகத்தூரில் 15, பள்ளிகொண்டாவில் 23, பென்னாத்தூரில் 15, திருவலத்தில் 15 என மொத்தம் 68 வாக்குச்சாவடி மையங்களும், நகராட்சி வாரியாக குடியாத்தத்தில் 77, பேரணாம்பட்டில் 42 என ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 1857 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலின்போது 1808 ைமயங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) புருஷோத்குமார்.

Related Stories: