தலை துண்டித்து வாலிபர் கொலை மாயமானவர்கள் பட்டியலை எடுத்து போலீஸ் விசாரணை

சேலம், பிப்.27:சேலத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து, மாயமானவர்கள் பட்டியலை எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அழகாபுரம் அடுத்த பசுவக்கல் என்ற இடத்தில் தலை, கை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் ஒன்று, கடந்த 24ம் தேதி மீட்கப்பட்டது. இதுகுறித்து அழகாபுரம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வேறு இடத்தில் வைத்து அந்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டதுடன், உடல் பாகங்களை எரித்து இங்கு கொண்டு வந்து போட்டுச் சென்றது தெரியவந்தது. உயிரிழந்தவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது என்பதை கண்டறிவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடமும், சமீபத்தில் மாயமானவர்களின் பட்டியல் எடுத்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேசமயத்தில், கை விரல்கள் தனியாக வெட்டப்பட்டுள்ளதால், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். சடலம் கிடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால், அங்கிருந்து கோரிமேடு மற்றும் அழகாபுரம் செல்லும் வழிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், நள்ளிரவு நேரத்தில் அவ்வழியாக சென்ற வாகனங்களின் எண்கள் சிக்கியுள்ளன. அந்த விவரங்களை வைத்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: