×

வேலம்பட்டி தொட்டி பாலத்தில் தண்ணீர் செல்லும் திறனை அதிகப்படுத்த வேண்டும்

போச்சம்பள்ளி, பிப்.27: வேலம்பட்டி தொட்டி பாலத்தில், தண்ணீர் செல்லும் திறனை அதிகப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி அணையிலிருந்து கால்வாய் மூலம், பாலேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியிலிருந்து சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், கடந்த 2012ம் ஆண்டு, 13.8 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் மைக்கப்பட்டது. இந்த கால்வாய் மூலம்  நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுகிறது.  100க்கும் மேற்பட்ட கிராமங்களின்,  குடிநீர் தேவையை பூர்த்தியாகிறது. இந்த கால்வாயின் இடையே, வேலம்பட்டி பகுதியில் 300 மீட்டருக்கு தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிப்பாலம் முன்பு, 100 மீட்டர் தூரத்திற்கு மண் கால்வாய் உள்ளதால், அடிக்கடி நீர்க்கசிவு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.
மேலும், எலிகள் துளையிடுவதால் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்வது அடிக்கடி தடைபடுகிறது. இதன் காரணமாக, நிமிடத்திற்கு 22 கன அடி தண்ணீர் கடக்க வேண்டிய நிலையில், தற்போது 12 கனஅடி தண்ணீர் மட்டுமே கடந்து செல்கிறது. எனவே, வேலம்பட்டி தொட்டி பாலத்தில் தண்ணீர் செல்லும் திறனை அதிகரிக்க வேண்டும். இந்த பாலத்தின் இருபுறமும் 100 மீட்டருக்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும். மேலும், கால்வாயில் ஏற்பட்டுளள் மண் அரிப்பை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Velampatti ,
× RELATED பல்லடம் அருகே வேலம்பட்டியில்...