×

வீடு, வருமானம் இல்லாமல் வறுமையில் முன்னாள் ராணுவ வீரர் குடும்பம்

கிருஷ்ணகிரி, பிப்.27: கிருஷ்ணகிரியில் வீடு, வருமானம் இல்லாமல் வறுமையில் வாடும் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு, உதவி செய்திட கலெக்டருக்கு நுகர்வோர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் பிரபாகருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்தவர் மும்தாஜ். 101 வயதான இவரது கணவர் முகமதுகாசீம், முன்னாள் இந்திய ராணுவ வீரர். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டார். இதனால் வீடு ஏதும் இல்லாமல், தனித்து விடப்பட்ட இவரது மனைவி, சிதிலமைந்த ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு வசித்து வரும், தனது மகளின் வீட்டில் தஞ்சம் அடைந்தார். மேலும், அங்கு போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், போதிய வருமானம் இன்றி தவித்து வரும், தனது பேரனுக்காக அரசு வழங்கும் இலவச வீடு மற்றும் உதவிக் கேட்டு பல வருடங்களாக அரசு அலுவலகங்களை நாடி, பலமுறை மனு அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்த அரசு அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவர் தற்போது போலியோ நோயால் பாதிக்கப்பட்ட தனது பேரனுடன், உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். எனவே, முன்னாள் ராணுவ வீரரின் மனைவியான மும்தாஜிக்கு அரசு வழங்கும் இலவச வீடு ஒன்றை வழங்கிட வேண்டுமாய் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : soldier ,home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...