×

10வது, பிளஸ்2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள பயிற்சி

கிருஷ்ணகிரி, பிப்.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10வது மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அரசு பள்ளி விடுதிகளில் தங்கி 10வது மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சங்கர், தமிழ் பட்டதாரி ஆசிரியர் மரியஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதிக் காப்பாளர் சவரிதாஸ் வரவேற்புரையாற்றினார்.

இளநிலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மோனிஷா சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பிரிவுகள், 12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்ந்தெடுக்க வேண்டிய கல்லூரி வகுப்புகள் குறித்தும், அரசு துறையில் பணிபுரிய தயார் செய்ய வேண்டிய போட்டித் தேர்வுகள் மற்றும் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் விடுதியில் தங்கி பயிலும் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதி காப்பாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

Tags : Govt ,
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்