×

காரிமங்கலம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பு

காரிமங்கலம், பிப்.27: காரிமங்கலம் அருகே, அரசுக்கு சொந்தமான ஏரிகளில் தடை செய்யப்பட்ட  ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல்வேறு ஏரிகளில், மீன் வளர்க்க ஏலம் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், ஏலம் நடத்தப்படாமலேயே, பல ஏரிகளில் மீன் வளர்ப்பு நடந்து வருகிறது. குறிப்பாக, அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள், சட்ட விரோதமான முறையில் வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், தனியாருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் பண்ணைகள் அமைத்து, ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

 காரிமங்கலம் பேரூராட்சி ராசப்பக்குட்டையில், மீன் வளர்ப்பு குத்தகை யாருக்கும் விடவில்லை. ஆனால் அதிகாரிகள் ஆசியுடன், இந்த ஏரியில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இது  குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோழி கழிவுகள் மற்றும் பல்வேறு ரசாயன பொருட்கள் கொண்டு இம்மீன்கள் வளர்க்கப்படுகின்றன. தடை செய்யப்பட்ட இந்த மீன்கள், விரைவில் வளர்ச்சி அடைந்து விடுகின்றன. இவை மதுக்கடைகள், குடியிருப்புகள் அருகே சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மீன்களை சாப்பிடுபவர்களுக்கு ஆண்மைக்குறைவு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,African ,Karimangalam ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்