காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் 50 ஏக்கரில் பயோ டைவர்சிட்டி பூங்காகலெக்டர் தகவல்

தூத்துக்குடி,பிப்.27: தூத்துக்குடியில் பயோ டைவர்சிட்டி பூங்கா பணிகள் துவங்க உள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.  தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 13 பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்து பேசுகையில்: இந்த பேரணி மூலம் பொதுமக்களிடையே காற்று, தண்ணீர் மற்றும் ஒளி மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக விழிப்பணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தி மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் பள்ளி அளவில் மாணவ, மாணவியர்களிடையே மாசு கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தின் மூலம் சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.1 கோடி மதிப்பில் அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மீன் ஆராய்ச்சி கல்லூரி அருகில் 50 ஏக்கரில் பயோ டைவர்சிட்டி பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள் முறையாக கடைபிடித்து மாசில்லாத மாவட்டமாக மாற்றிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

 இப்பேரணி பள்ளியில் துவங்கி பாளைரோடு, புதிய மாநகராட்சி, பழைய பஸ்நிலையம், குரூஸ்பர்னாந்து சிலை,  பாலவிநாயகர் கோவில் வழியாக மீண்டும் பள்ளியில்  நிறைவடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் காற்று மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

காற்று மாசுபடுதலினால் ஏற்படும் தீமைகள், நோய்கள் மற்றும் சுற்றுசூழல் கேடுகளைப் பற்றி முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.  நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: