களக்காடு அருகே சாலை அமைக்கும் பணிகள் முடக்கம் விவசாயிகள் கடும் பாதிப்பு

களக்காடு, பிப்.27:  களக்காடு அருகே சாலை அமைக்கும் பணிகள் முடங்கி கிடப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். களக்காடு அருகே உள்ள மாவடியில் இருந்து தேன்பொத்தை வழியாக மலையடிபுதூருக்கு செல்லும் சாலை, களக்காடு யூனியனுக்குட்பட்டதாகும். மலையடிவார சாலையான இந்த பாதை மூலம் மாவடி, மலையடிபுதூர் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து காட்சி அளித்தது. சாலை முழுவதும் குண்டும், குழிகளாக கற்களாக சிதறி கிடந்தது. மண் திட்டுகளும் உருவாகின. மழை காலங்களில் சாலைகளில் நீச்சல்குளம்போல் தண்ணீர் தேங்கி சகதிமயமாக காட்சி அளித்தது. இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதன் விளைவாக களக்காடு யூனியனில் இருந்து சாலையை சீரமைத்து, 3 பாலங்கள் கட்டுவதற்கு ரூ.53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன் டெண்டர் விடப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. ஆனால் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே சீரமைப்பு பணிகள் முடங்கி விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இருந்த சாலை பெயர்த்து போடப்பட்டுள்ளது. ஜல்லி கற்கள் கொண்டு வரப்பட்டு சாலையின் குறுக்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தற்போது நெல் மற்றும் வாழைகள் அறுவடை நடந்து வரும் நிலையில் சாலை பணி தாமதமாகி வருவதால் விளைநிலங்களில் இருந்து நெல், வாழைத்தார்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: