முக்கூடல் பீடித்தொழிலாளர் மருத்துவமனை மேம்படுத்தப்படும்

நெல்லை, பிப். 27: முக்கூடலில் பீடித்தொழிலாளர் மருத்துவமனை மேம்படுத்தப்படும். இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என நெல்லையில் நடந்த கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்பி தெரிவித்தார். நெல்லை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அரங்க சாரல் அரங்கில் நடந்தது. ஞானதிரவியம் எம்பி தலைமை வகித்தார். தென்காசி எம்பி தனுஷ் குமார், கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், எம்எல்ஏக்கள் டிபிஎம் மைதீன்கான், பூங்கோதை, ஏஎல்எஸ் லட்சுமணன், முகம்மது அபுபக்கர் ஆகியோர் கூட்டடத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஞானதிரவியம் எம்பி பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடத்தப்படும் முதல் கண்காணிப்புக் குழு கூட்டமாகும். இந்த கூட்டத்தின் மூலம் மக்களின் குறைகளை தெரிவிக்க முடியும். குடிநீர், சாலை வசதி தான் மக்களுக்கு முக்கியம். எனவே மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை உடனுக்குடன் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும். பல இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. ஆனால் நன்றாக இருக்கும் சாலைகள் மீண்டும் போடப்படுகின்றன. இதை முறைப்படுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த கூட்டத்தை நடத்த வேண்டும். முக்கூடலில் பீடித் தொழிலாளர் மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளேன். அந்த மருத்துவமனைக்கு எத்தனை படுக்கைகள் தேவை, டாக்டர்கள் தேவை என கலெக்டர் பரிந்துரை அளித்துள்ளார். விரைவில் அந்த மருத்துவமனை மேம்படுத்தப்படும். மத்திய தொழிலாளர் நல அலுவலகம் நெல்லையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை மீண்டும் நெல்லைக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை பேசுகையில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு 15 சதவீதம் நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை குறைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தாமல் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். கிராமங்களில் உள்ள பழைய கிணறுகளை தூர் வார வேண்டும். ஆலங்குளம் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் அங்கு பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இடைகால் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரு பிரசவம் கூட நடக்கவில்லை. எனவே பெண் டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.அபுபக்கர் எம்எம்ஏ பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்திற்கு பெண் டாக்டர்கள் இல்லை. சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெண் டாக்டர்கள் நியமனம் செய்வதுடன், சுற்றுச்சுவர் வசதியும் செய்ய வேண்டும் என்றார்.

ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ பேசுகையில், கண்டியப்பேரி அரசு மருத்துவமனை கட்ட அரசு ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்து ஒராண்டு ஆகிறது. இன்னும் அந்த நிலம் சர்வே பணிகளை கூட முடிக்கவில்லை. தினமும் நான் சர்வேயரிடம் பேசுகிறேன். இன்று, நாளை என காலம் கடத்துகிறார்.டிபிஎம் மைதீன்கான் எம்எல்ஏ பேசுகையில், மேலப்பாளையம் கருங்குளத்தில் எம்எல்ஏ நிதியில் ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் எனக்கே தெரியாமல் ரேஷன் கடையை திறந்து விட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியா என தெரியவில்லை. எம்எல்ஏ நிதி ஒதுக்கினாலும் பணிகள் தாமதமாக ஆண்டுகணக்கில் நடக்கிறது.

தனுஷ்குமார் எம்பி பேசுகையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. கல்விக்கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன.

அடமானம் கேட்கின்றனர். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கடன் வழங்காமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன என்றார்.

கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு கலெக்டர் ஷில்பா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்த்ராச்சலம், மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி பர்னாண்டோ ஆகியோர் பதில் தெரிவித்தனர். நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெற்றிவேல், பொதுப் பணித்துறை சிற்றாறு கோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகர், உதவி இயக்குநர்கள் குற்றாலிங்கம் (டவுன் பஞ்.) அருணாச்சலம் (பஞ்.) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: