×

இன்று தொடக்கம் நாகர்கோவிலில் புத்தக திருவிழா

நாகர்கோவில், பிப்.27: மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நாகர்கோவிலில் இன்று (27ம் தேதி) தொடங்கி மார்ச் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனர் வீரபாலன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் புத்தக திருவிழா நடக்க உள்ளது. தமிழகம் ஓர் அறிவு களஞ்சியம், வீடுகள் தோறும் நூலகம் அமைப்போம் என்ற லட்சியத்தை கருத்தில் கொண்டு இதுவரை 339 புத்தக கண்காட்சிகளை நடத்தி உள்ளோம். 340வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி (இன்று) முதல் மார்ச் 8ம் தேதி வரை 11 நாட்கள் நடத்த உள்ளோம். நாகர்கோவிலில் 4 வது ஆண்டாக இந்த புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. 40 அரங்குகளுடன், 50 ஆயிரம் தலைப்புகளில், 50 லட்சம் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களுடன் இந்த புத்தக கண்காட்சி நாகர்கோவில் பயோனியர் முத்து மகாலில் நடக்கிறது. கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணி பதிப்பக நூல்கள், எழுத்தாளர்கள் நூல்கள், சாகித்ய அகாடமி நூல்கள், இலக்கியம், வரலாறு, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீட், டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான நூல்கள், ஆய்வு நூல்கள், ஆன்மிகம், சுய முன்னேற்றம் மற்றும் குழந்தைகளுக்கான நூல்கள் விற்பனைக்கு உள்ளன.

பிப்ரவரி 27ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடக்கிறது. குமரி மாவட்ட  கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கண்காட்சியை திறந்து வைக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார். கல்லூரி முதல்வர்கள், நாவலாசிரியர்கள் உட்பட பலரும் விழாவில் கலந்து கொள்கின்றனர். நமது நாடு, நமது வீடு, நமது பள்ளி, நமது நூலகம் என ஒரு கோடி வீட்டு நூலகம் அமைக்கும் லட்சிய பயணத்தின் தொடக்க நிகழ்வாகவும் இந்த புத்தக திருவிழா அமைய உள்ளது. தினமும் மாலை 5.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், இலக்கிய உரை, பட்டிமன்றம், பாட்டரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்வுகளும் நடக்க உள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஒருங்கிணைப்பாளர்கள் ரவிவர்வா, பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Book Fair ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...