×

மிளகாய் உலர்களம் அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ் மங்கலம் பிப் 27: ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரங்களில் மிளகாய் அதிகம் பயிரிடக் கூடிய கிராமப் பகுதிகளில் உலர்களம் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிகமான மிளகாய் பயிரிடப்படும் பகுதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். பிச்சனாகோட்டை, சிலுகவயல், இரட்டையூரனி, வில்லடி வாகை, புல்லமடை, சவேரியார்பட்டிணம், வல்லமடை, செங்குடி, பூலாங்குடி, வானியக்குடி, அரியான்கோட்டை, பணிதிவயல், நகரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமான மிளகாய் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.இப்பகுதியில் விளையக்கூடிய மிளகாய் வத்தலை ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறக்கூடிய மிளகாய் சந்தையில் விவசாயிகள் கொண்டு போய் விற்பனை செய்வது வழக்கம்.

இந்த மிளகாய் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாகும். இங்கு நடைபெறும் சந்தைக்கு மதுரை, திருச்சி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.விவசாயிகள் மிகவும் கஷ்டப்பாடுபட்டு மிளகாய் விவசாயம் செய்து அந்த மிளகாய் பழங்களை பறித்து கண்மாய் கரை, வயல்வெளி, பொட்டல் காடுகள் என பல்வேறு இடங்களில் மண்ணில் உலர வைப்பதினால் மிளகாய் ஒரு விதமான மங்களான கலராகவும், வெள்ளையாக சோடை என சொல்வது போலும் மிளகாய் வந்தல்கள் தரம் குறைந்து காணப்படுகிறது. அவ்வாறான மிளகாய் வத்தல் மார்க்கெட்டில் மிகவும் குறைந்த விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பல கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் மன உளைச்சலுக்கும், நஷ்டத்திற்கும் ஆளாகின்றனர். ஆகையால் இந்த நிலை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் கிராமங்கள் தோறும் மிளகாய் உலர்களம் அமைத்து தந்து விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்