×

கௌரவ நிதி பெறும் விவசாயிகள் கிசான் அட்டை பெற நாளை கடைசி நாள்

சிவகங்கை, பிப். 27: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதம மந்திரி விவசாய கௌரவ நிதி பெறும் பயனாளிகள் அனைவரும் விவசாய கடன் அட்டைகளை உடனடியாக பெறுவதற்காக அனைத்து கிராமங்களிலும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வங்கித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து முகாம்கள் நடத்தி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கி வருகின்றனர். விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு 1.60 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் விவசாயிகள் வேளாண் இடு பொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கிடவும் இக்கடன் அட்டையினை பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத தொழில்களுக்கு முதலீடு செய்ய கடன் பெறலாம். கடன் அட்டை பெற நாளை வரை மட்டுமே சிறப்பு முகாம் நடக்க உள்ளது. விவசாய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் சிட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து வேளாண்மைத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது வங்கி கிளை அலுவலர்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோரிடம் முகாம்களிலோ அல்லது நேரடியாகவோ வழங்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்