விவசாய சங்க தேர்தலை நடத்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை, பிப்.27: மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கத்திற்கு கடந்த 6 ஆண்டாக தேர்தல் நடத்தவில்லை. தேர்தலை உடனே நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் நெல் அறுவடை நடந்து வருகிறது. தேவையான இடத்தில் தற்போது நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மூட்டைகளை கொள்முதல் செய்ய ஊழியர்கள் இல்லை. இதனால், ஊழியர் பற்றாக்குறையால், நெல் கொள்முதல் செய்ய முடியாமல், விவசாயிகள் தங்களது நெல்லை மையத்தில் குவித்து வைத்துள்ளனர்.

அறுவடையான நெல்லின் ஈரப்பதம் குறைந்து, விவசாயிகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான விலையை நுகர்பொருள் வாணிப கழகம் உரிய காலத்தில் பணம் பட்டுவாடா செய்யாமல் மாதக் கணக்கில் இழுத்தடிக்கிறது.மாவட்டத்தில், ஒவ்வொரு பாசனக் கால்வாய்க்கு ஒரு விவசாய சங்கம் உள்ளது. இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இத்தேர்தலை கலெக்டர் நடத்த வேண்டும். நிர்வாகிகள் இல்லாததால், விவசாய பாசனம் தொடர்பாக குற்றச்சாட்டுகள், கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முறையாக எடுத்து கூற முடியவில்லை. தேர்தல் நடத்தாமல், தற்போதும் இழுத்தடிப்பு வேலை நடைபெறுகிறது. உடனே சங்கத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.

பின்னர் கலெக்டர் பேசும்போது, ‘‘நெல் கொள்முதல் மையத்தில் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய போதிய ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளோம். இனிமேல் காலதாமதம் இருக்காது. அதேபோன்று கொள்முதலுக்கான பணம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய சங்க தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.பின்பு வேளாண்மை விற்பனை மையம், தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் பிரிவு அதிகாரிகள் தங்களது துறையில் உள்ள வேளாண் தொடர்பான திட்ட பணிகள் குறித்து எடுத்து கூறினர். இதில் வேளாண்மைத் துறை, பொதுப்பணித் துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: