கால்நடைகள் தாகம் தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு வீணாகும் குடிநீரால் மக்கள் பாதிப்பு

திருமங்கலம், பிப்.27: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளுக்காக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு வருவது அதிகாரிகளுக்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது.திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு கரூர் மாவட்டத்திலிருந்து காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் வழியாக வருகிறது. மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் இருந்து பைப்லைன் அமைக்கப்பட்டு கரடிக்கல், உரப்பனூர், சாத்தங்குடி, பொன்னமங்கலம், ஆலம்பட்டி, திரளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இதேபோல் திருமங்கலம் நகராட்சி பகுதிக்கும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு எல்லாம் தற்போது இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் கூடுதலாக குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

சோழவந்தான் ரோடு வழியாக வரும் காவிரி குடிநீர் அழுத்தம் காரணமாக ஆங்காங்கே பைப்லைன் உடைகிறது. இது தவிர கிராமங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர் அவற்றின் தாகத்தினை தீர்க்கவும் கூட்டுக்குடிநீர் குழாய்களை உடைத்து விடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

குழாய் உடைந்தால் நகர் மற்றும் கிராம பகுதிகளில் குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது. ஒரு முறை குழாய் உடைந்தால் அதனை சரி செய்ய ஓரிறுநாள்கள் ஆனாலும், அவற்றின் செலவு அதிகளவில் இருப்பதால் ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர். இது குடிநீர் அதிகாரிகளுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. குழாய் உடைப்பு குறித்து ஒரு சில பகுதிகளில் போலீசாரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது தினசரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாய்களை கண்காணிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், கோடைகாலம் முடியும் வரையில் குழாய் உடைப்பு பிரச்னை தொடரும். இதனை சமாளிப்பது எங்களுக்கு சவாலான ஒன்றுதான் என்றனர்.

Related Stories: