கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்

திண்டுக்கல், பிப். 27: திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் திருநீற்று பூசுதலுடன் 40 நாள் தவக்காலத்தை துவக்கினர்.சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரக்கூடிய 40 நாட்களை தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் விரதமிருந்து ஆடம்பரங்களையும், கொண்டாட்டங்களையும் தவிர்த்து இறை வழிபாட்டில் முழுவதுமாக ஈடுபடுவர். மேலும் இந்நாட்களில் இறைவனிடம் தங்களுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவர். இது மனமாற்ற காலம் என்று கிறிஸ்தவர்களால் கருதப்படும். இந்த தவக்காலம் ஆண்டுதோறும் சாம்பல் புதன் எனப்படும் விபூதி புதன் நாளில் இருந்து துவங்கும்.

இந்த ஆண்டு தவக்காலம் நேற்று சாம்பல் புதனுடன் துவங்கியது. இதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள 320 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய வியாகுல அன்னை திருத்தலத்தில் நேற்று அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். திருப்பலியின் நடுவே பங்குத்தந்தை பன்னீர்செல்வம், அனைவரது நெற்றியிலும் விபூதியை பூசினார். மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய் என்ற அடிப்படையிலும், தவத்தை ஏற்று கொள்ளும் விதமாகவும் அனைவரது நெற்றியிலும் விபூதி சிலுவை குறியீட்டில் பூசப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள சர்ச்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திருநீற்று பூசுதலுடன் தவக்காலத்தை துவங்கினர்.இந்த தவக்காலத்தின் 40 நாட்களும் கிறிஸ்தவர்கள் பலர் காவி உடை அணிந்து, அசைவ உணவுகளை தவிர்த்தும், தங்கள் இல்லங்களில் சுப விழாக்களை தவிர்த்தும், ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்தும், தான தர்மங்கள் செய்தும் விரதம் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: