பிரதமரின் ஆறாயிரம் வழங்கும் திட்டம் ஆரம்ப நிலை விண்ணப்பத்திற்கே வரவில்லை நத்தம் விவசாயிகள் விரக்தி

நத்தம், பிப். 27: கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் விவாசயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக வருவாய்த்துறை மூலம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்களது பட்டா எண், ஆதார் எண், வங்கியின் கணக்கு எண்ணிற்கான விபரமடங்கிய வரவு செலவு புத்தகத்தில் போட்டோவுடன் கூடிய முன்பக்கத்தின் ஜெராக்ஸ் வாங்கப்பட்டது. இதை ஆன்லைனில் வருவாய்த்துறையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளீடு செய்தனர். அப்போது ஆதார் மற்றும் வங்கியின் கணக்கு எண்ணுடன் அந்த வங்கியின் ஐஎப்எஸ்சி கோடும் பூர்த்தி செய்யப்பட்டது. தேர்தல் வந்ததால் கால அவகாசம் இன்றி உடனே விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு அவசரகதியில் விண்ணப்பங்களை பெற்று ஆன்லைனில் உள்ளீடு செய்தனர்.

இதில் சரியான விபரங்களை முறையாக உள்ளீடு செய்யாததால் விவசாயிகளுக்கு பணம் வந்து சேரவில்லை. பின்னர் வேளாண்மை துறை மூலமாக ஆன்லைனில் திருத்தம் மேற்கொண்டு உள்ளீடு செய்தனர். அவ்வாறு செய்தும் நத்தம் பகுதியில் ஆரம்ப நிலையில் விண்ணப்பித்த விவசாயிகள் பலருக்கும் இதுவரை பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து நத்தம் பகுதி விவசாயிகள் கூறியதாவது, ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதிக்காக ஆரம்ப நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை பணம் அவர்களது வங்கி கணக்குக்கு வந்து சேரவில்லை. இதுபற்றி வேளாண்மை அலுவலகத்தில் சென்று கேட்டால் அவர்கள் விண்ணப்ப நிலையை பார்த்து இதுவரை எந்த செய்தியும் வராமல் உள்ளது என்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் விண்ணப்பத்தில் திருத்தம் செய்து விவசாயிகளின் சரியான விபரங்களை விரைவாக உள்ளீடு செய்து திட்டத்தின் பலனை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: