×

8 மணி நேர வேலைக்கு ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை

திருப்பூர், பிப். 27: திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டுமென பனியன் பேக்டரி லேபர் யூனியன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  பனியன் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் 2020 மார்ச் 31ம் தேதியுடன் முடிகிறது. புதிய சம்பளம் குறித்து தொழிலாளர்களிடம் கருத்துகேட்கப்பட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை தொழிற்சங்க பிரமுகர்கள், பின்னலாடை உரிமையாளர்களிடம் முன் வைக்க உள்ளனர். இதற்கான பொதுக்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் எம்.பி. சுப்ராயன் தலைமை வகித்தார். இதில், பனியன் தொழிலாளர்களுக்கான புதிய சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டது.

 இதில் கட்டிங், டைலரிங், பேக்கிங், மெஷின் சிங்கர், காஜாபட்டன், எம்ராய்டரிங் பிரிவில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலைக்கு மாதம் ரூ.18 ஆயிரம் என்ற அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.693 ஊதியமாக வழங்க வேண்டும். செக்கிங் தொழிலாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500, லேபிள் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரமும், ஹெல்பர், கைமடித்தல் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரத்து 500, லோக்கல் மெசின் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.17 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். ஓவர் டைம் வேலைகள் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி வேலை செய்யும்பட்சத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும். 1936ம் ஆண்டு சென்னை விலைவாசி குறியீட்டு 15 ஆயிரம் புள்ளிக்கு மாதம் ரூ.3 ஆயிரமும் அதற்கு மேல் உயருகிற புள்ளி ஒவ்வொன்றுக்கும் 30 பைசா வீதம் கணக்கீட்டு வழங்க வேண்டும். பயணப்படியாக மாதம் ரூ.ஆயிரத்து 500 என்ற அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.58 வழங்க வேண்டும். இரவு ஷிப்டில் ஆப் நைட்டுக்கு ரூ.50ம் புல் நைட் வலைக்கு டிபன் பேட்டாவாக ரூ.100 வழங்க வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, குடியிருப்பு வசதிகள், கேண்டீன் வசதி, வீட்டு வாடகைப்படி, காப்பீட்டு வசதி, மருத்துவ பரிசோதனை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் சேகர், இசாக், செல்வராஜ், நடராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா