ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்

ஈரோடு, பிப்.27: மாநகராட்சி பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வர தாமதமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு காவிரி நீர் குடிநீராக வழங்கப்படுகிறது. ஈரோட்டை சுற்றி உள்ள சாய, சலவை, தோல் ஆலைகளின் கழிவுகள் காவிரியில் கலப்பதால் குடிநீர் மாசுபடிந்து வருவதாக புகார் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பவானி அருகே உள்ள ஊராட்சிகோட்டை காவிரி ஆற்றில் இருந்து ரூ.484.50 கோடி செலவில் குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகள் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வருகிறது.

வரும் மார்ச் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மேலும் 4 மாதம் தாமதமாகும். மாநகராட்சிக்கு வெளியே திட்டமிட்டப்படி பணி முடிக்கப்பட்ட போதிலும், மாநகரின் உள் பகுதியில் பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், பாதாள மின்கேபிள் பணி, ஸ்மார்ட் சிட்டி பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி என நான்கு பணிகளும் ஒரே நேரத்தில் நடப்பதால் பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பெரிய குழாய்களை அடுக்கி வைக்க சாலையில் இடம் இல்லாததால் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியிடங்களில் தண்ணீர் சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், மாநகர பகுதிகளில்தான் திட்டமிட்டபடி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், வீடுகளுக்கான இணைப்பு வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட மேலும் 4 மாதம் தாமதமாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: