கரும்பு பாக்கி வழங்காவிட்டால் பிப்.29 முதல் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு பிப்.27: பவானி அருகே ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவை தொகையை வழங்காவிட்டால் வரும் 29ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு  சர்க்கரை உற்பத்தி செய்ய விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆலை நிர்வாகம், வெட்டிய கரும்பிற்கு உரிய பணத்தை வழங்காமல் பல மாதங்களாக பாக்கி வைத்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஆலை நிர்வாகம் பாக்கி தொகையை வழங்க வேண்டும் என கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை பாக்கி தொகை வழங்காததால் வரும் 29ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. அந்த மாவட்ட செயலாளர் முனுசாமி கூறியதாவது:தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் கோபியில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி தொகை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 5 மாதமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 35 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பாக்கி தொகையை வழங்காமல் உள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் எச்சரித்தும் ஆலை நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. மேலும், விவசாயிகள் பெயரில் வங்கியில் 7 கோடி ரூபாய் பெறப்பட்டது. இதற்கான தொகையை விவசாயிகளின் கரும்பு தொகையில் ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகையையும் வங்கிக்கு செலுத்தவில்லை. இதனால் புதிய கடன்களை விவசாயிகள் பெற முடியாத நிலை இருந்து வருகிறது.

வரும் 28ம் தேதிக்குள் நிலுவை தொகை, வங்கி கடனை ஆலை நிர்வாகம் வழங்காவிட்டால் வரும் 29ம் தேதி முதல் ஆலை வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பு விவசாய சங்கங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: