×

இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் சின்னசேலம் பேருந்து நிலையம்

சின்னசேலம், பிப். 27: இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் சின்னசேலம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி விரிவாக்கம் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சின்னசேலம் வளர்ந்து வரும் நகரமாகும். சின்னசேலம் தற்போது தாலுகாவாகவும், ஊராட்சி ஒன்றிய தலைநகரமாகவும் உள்ளது. ஏற்கனவே சட்டமன்ற தொகுதியாகவும் இருந்துள்ளது. சின்னசேலத்தை மையமாக வைத்து சுமார் 40 கிராமங்களும், அருகில் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் என்ற இரு நகர பகுதிகளும் உள்ளது. மேலும் சின்னசேலம் வழியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், பாண்டி, கடலூர், சென்னை, ஆத்தூர், சேலம், ஈரோடு, கோவை, பெரம்பலூர், திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சின்னசேலத்தில் இருந்து சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுடன், மினிபேருந்துகளும் சென்று வருகிறது. தற்போது சின்னசேலம் பேருந்து நிலையம் மிக சிறியதாக இருப்பதாலும், ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதாலும் கிராமப்புற பேருந்துகளை குறுக்கு, நெடுக்காக நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் சின்னசேலம் வழியாக தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் பஸ் நிலையத்துக்குள் நுழைய முடியாமல் சாலை ஓரத்திலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி, பின் ஏற்றி செல்கின்றனர். அதேபோல பயணிகளும் பஸ் நிலையம் உள்ளே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் அடிக்கடி சின்னசேலம் பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளால் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் சின்னசேலம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் தொடர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். சின்னசேலம் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சின்ன
சேலம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவும் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகராக மாறி உள்ளதால் அதன் அருகில் உள்ள சின்னசேலத்தில் போதுமான சாலை வசதி, பஸ் நிலையம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். ஆனால் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிடம் கூட இல்லை. ஆகையால் மாவட்ட கலெக்டர் சின்னசேலம் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து இலவச கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளை செய்து தருவதுடன், சின்னசேலம் பஸ் நிலையத்தை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் விரிவாக்கம் செய்து தர வேண்டும் என்று நகர்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Chinasalem Bus Stand ,
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...