19 மீனவ கிராமங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி

விழுப்புரம், பிப். 27: மழை காலத்தில் மாற்று தொழிலாக 19 மீனவ கிராமங்களில் திறன் மேம்பட்டு பயிற்சி மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மீனவர் மக்கள் நலனுக்கான திறன் வாழ்வாதார பயிற்சியினை  ஆட்சியர் அண்ணாதுரையின் அறிவுறுத்தலின்படி உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டு, இந்த திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது உதவிஆட்சியர்(பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் மற்றும் வானூர் பகுதிகளை சார்ந்த மீனவ கிராமங்களில் வசிக்கக்கூடிய இளைஞர் மற்றும் மகளிருக்கு புயல் மற்றும் மழைகாலங்களில் மாற்று தொழிலாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக திறன் மேம்பாட்டு  மேற்கொள்ளும் வகையில் மீனவர்கள் வசிக்க கூடிய பகுதியில் மீனவ மக்கள் சுயதொழில் மேற்கொள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சுயதொழில் செய்ய விருப்பம் உள்ள மீனவர்களிடம் அணுகினோம். அவர்களின் ஆர்வத்திற்கேற்ப கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் பராமரிப்பு மேற்கொள்ளுதல், மீனவர்கள் பயன்படுத்தும் படகு இயந்திரம் பழுதுபார்க்கும் பயிற்சி, மகளிருக்கு அழகுகலை பயிற்சி,  டைலரிங். எம்ராய்டரிங் போன்ற பயிற்சியினை மேற்கொள்ளும் வகையில் 19 கிராமங்களில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதில் முதற்கட்டமாக கடந்த நவம்பர் 16ம் தேதி தலா 160 ஆண்கள், பெண்கள் என 320 பேருக்கு அவர்கள் விரும்பிய பயிற்சி ஊக்கத்தொகையுடன் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி  பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திலேயே வழங்கப்படுகிறது.மேலும் சுயதொழில் தொடங்க வங்கி கடன் பெற்றுத்தரும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்ற மீனவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் சில முக்கிய நிறுவனங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பினை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அழகுகலை திறன் வளர்பயிற்சி பெற்ற சில மகளிர் விடுமுறை நாட்களில் திருமணம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அழகுகலை திறமையை வெளிப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதேபோன்று படகு இயந்திரம் பயிற்சி பெற்ற இளைஞர்களும் தங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்த படகுகளை சரிசெய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ்களை அரசு வழங்கிவருகிறது.  இதன் மூலம் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நேர்முக வேலைவாய்ப்பு தேர்வில் 3 பேர்   சிறப்பான முறையில் செயல்முறை விளக்கம் செய்து காட்டியதால் ஓமன் நாட்டில் பணிபுரிவதற்கான ஆணையினை பெற்று வெளிநாட்டுக்கு செல்ல உள்ளனர். மேலும், வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வாகன ஓட்டுநர் பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநர் ராஜா, பேரிடர் மேலாண்மை மாவட்ட திட்ட அலுவலர் வாசுதேவன், இந்திய சாலை பாதுகாப்புக்கழகத்தின் இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன்,  பொது மேலாளர் மீனாட்சி,  கனரா வங்கியின் மேலாளர் கிருபா சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Related Stories: