×

ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா பள்ளியை பற்றி அவதூறு பரப்பியதால் பரபரப்பு

நாகை,பிப்.26: பள்ளி மீது அவதூறு செய்தி பரப்பிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்பொதுமக்கள் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தரங்கம்பாடி அருகே நல்லாடை அம்பேத்கர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் திடீரென அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கூறியதாவது:

நல்லாடை பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்கள் எங்களது ஊரில் தங்கி வந்தார். இந்த காலத்தில் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் தலைமை ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு ஆசிரியை வீண்பழி சுமத்தியுள்ளார். மேலும் மாணவிகள் மீது தலைமை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும், பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவப்பெயர் ஏற்பட காரணமான ஆசிரியை மீதும் அவரது கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமாதானபேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : school ,collector ,Darna ,teacher ,office ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்