×

கீழ்வேளூர், கச்சனம் சாலையில் நள்ளிரவில் தோண்டப்படும் பள்ளங்கள் மணல் குவியலால் ஏற்படும் விபத்து

கீழ்வேளூர், பிப்.26: கீழ்வேளூர், கச்சனம் சாலையில் நள்ளிரவில் தோண்டப்படும் பள்ளத்தில் உள்ள மண் குவியலால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் சாலையின் இரண்டு பக்கமும் சுமார் 3 அடி இடம் மட்டுமே உள்ளது. இதில் மின் கம்பங்கள், பெயர் பலகைகள், மரங்கள் உள்ளது. இந்நிலையில் சாலையின் பக்கங்களில் தொலை தொடர்பு கேபிள் பழுது பார்க்கும் பணி, குடிநீர் குழாய் பழுது பாக்கும் பணி மற்றும் பதிக்கும் பணிக்காக பள்ளங்கள் அடிக்கடி தோண்டப்பட்டு வருகிறது. சாலையின் இரண்டு பக்கமும் போதிய இடம் இல்லாத நிலையில் சாலை அருகிலேயே பள்ளங்கள் தோண்டப்படுவதால் ஒரு வாகனம் செல்லும் போது, எதிரே வரும் வாகனம் மாறி செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. தற்போது கீழ்வேளூர் கச்சனம் சாலையில் 4 இடங்களில் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் மற்றும் வள்ளவிநாயகம் கோட்டம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பழுது பாக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலையிலேயே மண் குவிக்கப்பட்டுள்ளது.

சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஒரே நேராக உள்ளதால் சாலையில் உள்ள மண் குவியல் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் விபத்திற்குள்ளாகி வருகிறது. சாலையில் பள்ளம் தோண்ட நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெறாமல் இரவு நேரத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளங்கள் தோண்டப்படுவதும், அந்த பள்ளங்களை அப்படியே மூடாமல் விட்டு விடுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளங்களை விரைவில் மூடவேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகை பணிமனையில் பணியாற்றும் ராதாமங்கலம், அக்கரகாரத்தை சேர்ந்த சுமத்திரா என்பவர் நேற்று முன்தினம் அதிகாலை மொபட்டில் வந்த போது குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டு போடப்பட்ட மண் மேட்டில் எதிரே வந்த வாகனத்தின் லைட் வெளிச்சத்தால் ஏறி விபத்திற்குள்ளாக ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Tags : Accidents ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...